பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2026ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இம்முறை ரொக்க பணம் வழங்கப்படலாம் என்ற பேச்சுக்கு மத்தியில் அது எவ்வளவு ரூபாய் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
வருடம்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் சிறப்புத் தொகுப்பையும், பொங்கல் பரிசுத் தொகையையும் வழங்குவது வழக்கமான ஒன்று. அதன்படி, தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதுவே கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைகளின்போது பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவை அடங்கிய தொகுப்புடன் 1000 ரூபாயும் வழங்கப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ரொக்க பணம் வழங்கப்படவில்லை. மாறாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே கொடுக்கப்பட்டது. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், 2026-ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் இந்தமுறை பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் பொங்கல் தொகுப்பு ரொக்க பணம் அதிகரிக்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
அதாவது கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் தொகுப்பில் அதிகபட்சமாக 2500 ரூபாய் ரொக்க பணமாக கொடுக்கப்பட்டது. இம்முறை இதனை தாண்டி 5000 ரூபாய் ரொக்க பணமாக கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது இரண்டு கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருந்தனர். அந்தக் கணக்கில் பார்த்தால் கூட இவர்களுக்கு 5000 ரூபாய் வழங்குவதற்கு 11 ஆயிரம் கோடி தேவைப்படும்.
ஏற்கனவே நிதி நெருக்கடி இருக்கும் நிலையில் தமிழக அரசு பொங்கல் தொகுப்பிற்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்யுமா என்பது கேள்வியாக உள்ளது. இதனால் பொங்கல் தொகுப்பிற்கு 5000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சாத்தியமாகுமா என்பதும் கேள்விக்குறியே. இந்தக் கேள்விகளுக்கு அடுத்த மாதத்தில் இதற்கு விடை கிடைத்துவிடும்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version