பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட  பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க பணமும் வழங்கப்படும். கடந்த 2022-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரொக்க பணம் கொடுக்கப்படவில்லை. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்க பணம் வழங்கப்படலாம் என பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். இதற்கிடையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு -2026 என்ற தலைப்பில் டோக்கன் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டிய பொருட்கள் இன்னும் 2 நாட்களில் வந்துவிடும். ஏற்கனவே இலவச வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு வந்துள்ளன. நேற்று டோக்கன் வரப்பெற்றுள்ளன. அதில் கடையின் பெயர், எண், டோக்கன் எண், ரேஷன் கார்டு தாரரின் பெயர், ரேஷன் அட்டை எண், கிராமம், தெரு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த டோக்கன்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரும்போது டோக்கன் திரும்ப பெறப்படும். டோக்கன் பெறாதவர்கள், பரிசு தொகுப்பு வாங்க வரும்போது அவற்றை நிரப்பி கொடுக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version