தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப். 8) கடிதம் எழுதியிருந்தார்.
இந்தநிலையில், 2014-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27 நிதியாண்டில் 7,611 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும், நிதிப் பற்றாக்குறையால் திட்டங்கள் எதுவும் முடங்கவில்லை என்றும், அதுபோன்ற எந்தவொரு கூற்றும் ஆதாரமற்றது என்றும் வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
https://x.com/AshwiniVaishnaw/status/2020726833453678697?
மேலும், தமிழகத்தில் தாமதமாகி வரும் ரயில்வே திட்டங்களுக்கு, மத்திய அமைச்சகத்தால் நிதி விடுவிப்பதில் ஏற்படும் தொடர் தாமதங்களே காரணம் என்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அஷ்விணி வைஷ்ணவ், அந்தக் குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்று குறிப்பிட்டார். மேலும், ‘ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை’ என்றும், மாநில அரசிடம் நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளாலேயே பல முக்கியத் திட்டங்கள் தாமதமாகின்றன என்றும் கூறினார்.
மேலும், தமிழக ரயில்வே திட்டங்களுக்காக மொத்தமாக தேவைப்படும் 4,326 ஹெக்டேரில் இதுவரை 1,052 ஹெக்டேர் மட்டுமே (24%) ரயில்வே துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.1,465 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
