கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. அங்கு பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேப் போல தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 18-ம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டாலும் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கோவை போன்ற பகுதிகளில் கனமழையும், நாளை மறுநாள் அதாவது 22-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிர்வாக ரீதியாக மிக கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பதிவாகும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version