புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரத்தில் வருகிற 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜனவரி 7) மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட இணையதள பக்கமான madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக இன்று மாலை 5 மணி முதல் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், இந்த மூன்று போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையுடன் ஒரு காளை உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
