தமிழகத்தை பொறுத்தவரையில் விசேஷமான நாட்களில் பத்திரப்பதிவு அதிக அளவில் நடைபெறும். கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த தினத்தில் பத்திரப்பதிவு அதிக அளவில் தாக்கல் ஆகும் என்பதை முன்கூட்டியே அறிந்து டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று பத்திரப்பதிவுக்கான டோக்கன்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டன.
அதன்படி நேற்றைய முன்தினம் டோக்கன்களை பெற்று அதிக அளவில் பத்திரங்களை மக்கள் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கிட்டத்தட்ட 303 கோடி ( 302.73 கோடி) ரூபாய்க்கு பத்திரங்கள் தாக்கலாகி உள்ளது. அன்றைய ஒரு தினத்தில் மட்டும் 303 கோடி ரூபாய் வருவாய் பதிவு துறைக்கு கிடைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி உறுதி செய்துள்ளார்.

பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவது அல்லது முன்பதிவு செய்வது போன்ற முக்கிய காரியங்களை அன்றைய தினத்தில் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்கிற நம்பிக்கைதான். இது நீண்ட நாட்களாக தமிழ் வழி மரபில் பின்பற்றி வரும் ஒரு விஷயமாகும்.எனவே புது சொத்துக்கள் வாங்குவது அல்லது முன்பதிவு செய்வது போன்ற சுப காரியங்களை செய்வதற்கு உகந்த நாளாக முகூர்த்த நாட்களை தேர்ந்தெடுப்பது குறிப்பிடத்தக்கது.
