வடசென்னையின் பிரபல தாதாவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1-ம், ஆயுள் தண்டனை கைதியுமான ரவுடி நாகேந்திரன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரனின் மகன்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, வடசென்னை தாதா நாகேந்திரனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக அஸ்வத்தாமன் வாங்கக்கூடிய மாமூல் இடங்கள், நிலத்தகராறு, கட்டப்பஞ்சாயத்து என அனைத்து தொழில்களிலும் ஆம்ஸ்ட்ராங் தலையிட்டதால், வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடியும், அஸ்வத்தாமனின் தந்தையுமான நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கின் கதையை முடிக்க உள்ளிருந்தே ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதியான நாகேந்திரன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் A1 ஆக சேர்க்கப்பட்டு இருந்தார். இதற்கிடையில், நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால், கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டு பின், மீண்டும் நாகேந்திரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் நலம் மிகவும் குன்றிய நிலையில் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.