கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி 6 மடங்கு அதிகரித்துள்ளது என்று இதில் 50 சதவீதம் பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் தொழில் நிறுவனங்கள் தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைதியான சட்டஒழுங்கு இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம், அதனை தேடித்தான் தொழில்துறையினர் வருகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக பொறுப்பேற்ற காலங்களில், எண்ணற்ற தொழில் வளங்களை மேம்படுத்தி உள்ளதுடன், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழில்களை திமுக அரசு ஈர்த்துள்ளது.

வரும் காலங்களில் 1.1 ட்ரில்லியன் டாலர் என்ற அளவில் முதலிடத்தில் இருக்க தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. உலகின் மிக முக்கிய புத்தொழில் நகரமாக தமிழகத்தை கட்டமைக்க முயற்சி எடுத்து வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

இதில் 50 சதவீதம் பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் தொழில் நிறுவனங்கள் தான் அதிகம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. சமூக நீதியை செயல்படுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமில்லாமல் தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சி செயல்படுத்தப்பட்டு வருவதுடன், உலகளாவிய தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் கோவையில் இந்த புத்தொழில் மாநாடு நடைபெற்று கொண்டுள்ளது” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version