2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், திமுக அரசின் புதிய அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் கூப்பன் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உற்சாகமாகப் பகிர்ந்துள்ளார். கே.வி.குப்பம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அரசு திட்டங்களால் பயன்பெறும் ஒரு இல்லத்தரசியின் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர், அவரிடம் இத்திட்டம் குறித்துக் கலந்துரையாடியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூப்பனைப் பயன்படுத்தி வீட்டின் தேவைக்கேற்ப எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும், ஆனால் அந்தப் பொருளைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை ‘இல்லத்து அரசிகளான’ பெண்களுக்கே இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களால் ஏற்கனவே பயனடைந்து வரும் நிலையில், அடுத்தபடியாக இந்த 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கலாம் என்பதுதான் தற்போது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரதான விவாதமாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் களத்தில் “தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா?” என்ற கேள்விக்கு மக்கள் அளிக்கும் அதே ஆதரவைப் போல, குடும்ப முடிவுகளிலும் பெண்களின் கரங்களே ஓங்கியிருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார். “பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்” என்ற முழக்கத்தோடு, இந்தத் திட்டம் வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, இல்லத்தரசிகளின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நகர்வு என்பதையும் தனது பதிவின் மூலம் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version