சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரத்திலும் போராட்டம் வெடித்துள்ளது.
சென்னை ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாருக்கு வழங்கப்பட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு இரவு பகலாக கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தூய்மை பணியாளர்களுக்கும், அமைச்சர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோருக்கும் இடையே கிட்டத்தட்ட 8கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.
அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோரை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்தது. அதனடிப்படையில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அத்தோடு, கடலூரில் 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.