தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அமைச்சரவையில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ம் தேதி முதல் 13ம் தேதி வரை நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், மாநகராட்சி மேயருடன் தூய்மை பணியாளர்கள் நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், போலீசார் கடந்த 13-ம் தேதி நள்ளிரவு தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து, பிறகு விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம் உட்பட 6 புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூய்மை பணியாளர் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பிறகு இது குறித்து தூய்மை பணியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தூய்மை பணியாளர்களான எங்களுக்கு, எங்கள் நலனுக்காக அரசு அறிவித்த புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் எங்களுக்கு தந்த திட்டங்களால் நலம் பெறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. முத்தாய்ப்பாக தனியாக எங்களுக்கென்று நல வாரியத்தை உருவாக்கியதற்கு, காலம் முழுவதும் நன்றி சொல்வோம்.
இந்த திட்டங்கள் எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் உறுதியுடன், எங்களை மதித்து எங்களுடைய நீண்ட கால கோரிக்கையினை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த தங்கள் தலைமையினை மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுகிறோம்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மற்ற துறைகளுக்கும் செய்யப்படுவதைப் போல எங்கள் ஊதியத்தையும் காலத்திற்கு ஏற்ப உயர்த்துவதற்கு, தூய்மை பணியாளர்களை தாய்மை பணியாளர்கள் என போற்றுகின்ற எங்கள் முதல்-அமைச்சர் உறுதி செய்வார் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் நம்புவதைப்போல் பெருநகர மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களும் நம்புகின்றோம். மரியாதையுடன், தூய்மை பணியாளர்கள் சார்பில் நன்றி.. நன்றி… நன்றி..!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.