தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ள, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, “மனுதாரர் ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது” என குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில், “சாட்சியங்களை கலைக்க மாட்டேன். அதற்கு வாய்ப்பும் இல்லை. வழக்கு தொடர்பாக விபரத்தை சேகரிக்க 3 மாதங்கள் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பில், “வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மனுதாரர் தானே சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து வருகிறார். ஆகவே மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version