பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக்கிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், கடந்த வாரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், சவுக்கு சங்கருக்கு சிகிச்சை வழங்க அனுமதி கோரி அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இதய நோய், நீரழிவு நோயில் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

அதேபோல சவுக்கு சங்கரை தனிமை சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்தும் அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு இன்று முதல் 2026 மார்ச் 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும், வசிக்கும் இடத்தை காவல்துறையினருக்கு தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும், உள்ளிட்ட பல நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்துள்ளனர்.

ஜனநாயகத்தில் எதிர் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாளை யாரும் பேச முடியாது என்றும், மனுதாரரின் மகனை ஏன் துன்புறுத்துகிறீர்கள் ஆட்சியபகரமான கருத்துக்களை தெரிவித்து இருந்தால் அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாம், அதற்கு மாறாக தனிநபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளனர்.

சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கு பொய் வழக்கு என்றால் அதன் பின் விளைவுகளை அதிகாரிகள் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை அனுப்பிய கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை சாதாரண விஷயங்களில் தீவிரமாக செயல்படுகிறது என்றும் கருத்து தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version