பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்துப் பள்ளி தலைமையாசியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (டிச.23) முடிவடைகிறது. இதில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மற்றும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்றுடன் தேர்வு நிறைவடைகிறது.
அரையாண்டுத் தேர்வு இன்றுடன் முடிவடைவதை அடுத்து, நாளை டிசம்பர் 24 முதல் 2026 ஜனவரி 4 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
அதேபோல், அரையாண்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிகல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ‘அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று நிறைவடைகிறது. நாளை முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5 திங்கட்கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். எனவே, விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். இசை, நடனம், ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்கள் விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும். தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும். மேலும், பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள்’ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
