திருத்தணி அருகே ரூ.3 கோடி காப்பீடு பணத்திற்காக, தந்தையை பாம்பை ஏவி கொலை செய்த கொடூர மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக (lab assistant) வேலை செய்து வந்தார். இவருக்கு மோகன்ராஜ், ஹரிஹரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் கணேசன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பாம்பு கடித்து இறந்ததாக அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உயிரிழந்த கணேசன் மொத்தம் 11 காப்பீடுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதில், 4 காப்பீடுகள் அவரது பெயரில் இருந்துள்ளன. இது போலீசாருக்கு சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் சார்பில் வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் புகார் ஒன்று வந்தது.

அதாவது, கணேசன் மரணம் தொடர்பாக அவரது இரண்டு மகன்களும் முன்னுக்கு பின் முரணாக பேசுவதாகவும், இதனால் அவர்களை விசாரிக்க வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன்பேரில், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதலில் ஒன்றும் தெரியாததை போல நடித்த அவர்கள், ஒருகட்டத்தில் காப்பீட்டு பணத்துக்காக கணேசனை கொலை செய்தததாக அவரது மகன்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது. தந்தை கணேசன் பெயரில் உள்ள ரூ.3 கோடி காப்பீடு பணத்தை எப்படியாவது வாங்கிவிட, அவரது இரண்டு மகன்களான மோகன்ராஜும், ஹரிஹரனும் திட்டமிட்டுள்ளனர். மேலும், இதற்காக தங்கள் நண்பர்களான பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார், தினகரன் ஆகியோரை தங்கள் சதியில் அவர்கள் சேர்த்துள்ளனர்.

அதன்படி, பாம்பை ஏவி கணேசனை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்த அவர்கள், கட்டுவிரியன் பாம்பு ஒன்றை பிடித்துள்ளனர். பின்னர், அதனை தந்தை கணேசனின் கழுத்தில் அவர்கள் கடிக்க வைத்துள்ளனர். இதில் பாம்பு விஷம் ஏறிய கணேசன், துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சொகுசு கார் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா கூறுகையில், “இந்த விவகாரத்தில் கணேசன் உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, அவரது இரண்டு மகன்களும் விஷப் பாம்பை ஏவி தந்தையை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால், கணேசனை பாம்பு கடிக்காமல் தப்பியுள்ளது. இதையடுத்து, இரண்டாவது முறையாக திட்டமிட்டு, 3 அடி கட்டுவிரியன் பாம்பினை ரூ. 1.5 லட்சத்திற்கு கூலிக்கு வாங்கி, அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, கடித்த பாம்பையும் வீட்டுக்குள்ளே அடித்து கொன்றுள்ளனர். இதில், கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் பாம்புகளை கையாளும் திறமை கொண்டவர் என்பதால், அவர் மூலமாக இந்த செயலை நிகழ்த்தி இருக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்யும்போது, இது சாதாரண பாம்பு கடி என நாடகம் நடத்தினர். ஆனால், சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தியதில் இது கொலை என்பது தெரியவந்தது” எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version