தமிழக மீனவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டுச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவர் சிக்கியுள்ள நிலையில், மற்றவர்களைப் பிடிக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் பணத்தை இலங்கை கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது கொள்ளையடித்துச் சென்று வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இலங்கை கடற்கொள்ளையர்கள் மிகுந்த அச்சுறுத்தலாகியுள்ள நிலையில் அவர்களைப் பிடிக்க வேண்டும் என மீனவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்கொள்ளையன் ஒருவரை தமிழக மீனவர்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த மீனவர்கள் 20க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூவர், செருதூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.

பின்னர் கத்தி, சுளிக்கி, தடி போன்ற ஆயுதங்களுடன் படகில் ஏறியவர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் அவர்களது ஜிபிஎஸ் கருவி செல்ஃபோன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு அவர்களை தடியால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் செருதூரை சேர்ந்த பழனிசாமி என்ற மீனவருக்கு கை உடைந்ததுடன், மற்ற மீனவர்களான சக்திமயில் , அபிமன், பாலசுப்ரமணியன், அபி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து கடற்கொள்ளையர்கள், மீன்பிடி தளவாடங்களுடன், அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிச் சென்ற நிலையில், அஜந்தன் என்பவர் தமிழக மீனவர்களிடம் சிக்கி உள்ளான்.

பின்னர் பிடிபட்ட இலங்கை கடற்கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்த மீனவர்கள்,  அவரை நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடி இறங்கு தளத்திற்கு அழைத்து வந்து  கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செருதூர் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்த இலங்கை கடற்கொள்ளையனிடம் கியூபிரிவு போலீசார் மற்றும் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கொள்ளையர்களால் நிம்மதி இழந்து மீனவர்கள் தவிக்கும் நிலையில் பிடிபட்டவரிடம் முறையாக விசாரணை நடத்தி, இலங்கை கடற்கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version