தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 30) முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்ய அவகாசம் இருந்தாலும், இடைப்பட்ட நாட்களில் மகாவீர் ஜெயந்தி (மார்ச் 31), வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு (ஏப்ரல் 1), புனித வெள்ளி (ஏப்ரல் 3) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) என நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால், வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய உண்மையில் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் மூன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுவுக்கான வைப்புத் தொகையாக  பொதுப் பிரிவினர் ரூ.10,000 மற்றும் ஆதிதிராவிடர்/பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.5,000 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் வைப்புத் தொகையைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் இந்த வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 7-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும், ஏப்ரல் 9-ம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version