தமிழகத்தில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டினரை நாடுக கடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மறறும் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்,மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றுள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசாவின் கீழ் தமிழகத்தில் தங்கியிருக்கின்றனர்.
வெளிநாட்டினர் பதிவு அதிகாரியான மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு இதை முறைப்படுத்த அல்லது அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. .
தமிழகத்தில் தற்போது மியான்மார் நாட்டை சேர்ந்த 95 பேர் தங்கியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிறப்பு முகாமில் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டினரையும் அவர்கள் தொடர்பான வழக்கு முடியும் வரை தங்க வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், “சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் விவகாரம் தொடர்பாக, வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டப்படி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தும் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், மத்திய அரசு பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.