நிர்பந்தம் செய்தே அதிமுகவை கூட்டணிக்கு பாஜக இழுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை சேலத்தில் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு தினங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் 2026 தேர்தலில் முடிந்தவுடன் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி என கூறுகிறார். முதலமைச்சர் அதிமுகவைச் சேர்ந்தவர் தான் என சொல்கிறார். இதில் இருந்தே இபிஎஸ்-ஐ முதலமைச்சராக அமித் ஷா ஏற்கவில்லை என்பது தெரிகிறது. கூட்டணி ஆட்சியை அதிமுக ஏற்கிறதா? மறுக்கிறதா? என இதுவரை அவர்கள் பதில் சொல்லவில்லை.
அதிமுகவை நிர்பந்தம் செய்து நெருக்கடி கொடுத்து தான் பாஜக கூட்டணியில் சேர்த்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை ஒரு மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைப்பார்கள், பின்பு அதனை கபளீகரம் செய்து விடுவார்கள். இதுதான் அவர்களது வழக்கம். அதிமுக தொண்டர்கள் பாஜகவுடன் கூட்டணி கூடாது என்ற நிலையில் இருக்கின்றனர்.
அதேபோன்று மதுரை முருகன் மாநாட்டு மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களே வைத்துக் கொண்டு திராவிடத்தை இழிவுபடுத்தி பேசியது. அதனை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டித்த போது, அதிமுகவினர் பெயரளவிற்கு கண்டிப்பது போல் பாவனை செய்கின்றனர்.
அதிமுக பாஜக என இரண்டு கட்சிகள் மட்டுமே அந்த கூட்டணியில் உள்ளனர். தேமுதிக, பாமக அவர்களுடன் கூட்டணியில் இல்லை. அதேபோன்று திமுக கூட்டணி என கனவு காண்பது பகல் கனவாக முடியும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
