திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கஞ்சா போதையில் வந்த கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், 17 வயதுடைய அந்த மாணவி தனது வீட்டில் அமர்ந்து செமஸ்டர் தேர்விற்காகத் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் புகுந்த மூன்று இளைஞர்கள், கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் மாணவியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் மாணவியின் கை, பின்னந்தலை மற்றும் கால்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோட முயன்றது. அப்போது, தப்பியோடிய மூன்று பேரில் ஒருவனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட இளைஞனுக்குப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததோடு, தப்பியோடிய மற்ற இருவர் குறித்தும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது அந்த மாணவி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மீஞ்சூர் போலீசார், தப்பியோடிய மற்ற இருவரைத் தேடி வருகின்றனர். குடியிருப்புப் பகுதியிலேயே புகுந்து மாணவி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வையும், கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது குறித்த கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version