தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.வி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் பாஸ்கரன் தரப்பு வழக்கறிஞர் வைரவன், பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் அவர் கொல்லப் படலாம் என்ற அச்சம் உள்ளது எனவே அவரை திருப்பி அனுப்பும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது நீதிபதிகள் இது கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும், தற்போது ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த மாதிரியான அச்சுறுத்தல் உங்களுக்கு உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாஸ்கரன் தரப்பு, இலங்கையில் போரின் போது அங்கு வசித்து வந்த தன்னுடைய தந்தை, அண்ணி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்ற தான் தற்போது இலங்கைக்கு திரும்பினால் தானும் கொல்லப்படலாம் என்ற வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் இந்தியாவிலிருந்து வெளியேறும் வகையில் தான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விசா கோரி விண்ணப்பம் செய்துள்ளேன்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றம் தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பாஸ்கரன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு விசா கோரி விண்ணப்பம் செய்துள்ள நிலையில், அது தற்போது சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பரிசு இல்லையில் உள்ளது, அந்த அடிப்படையில் தற்போது பாஸ்கரனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். அதே வேளையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.