தைரியமாக இருங்கள், உங்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை அ.தி.மு.க. துணை நிற்கும் என்று திருப்புவனம் அஜித்குமார் தாய், தம்பியை செல்போனில் தொடர்பு கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். அஜித்குமாரை இழந்து வாடும் அவரது தாய், தம்பி ஆகியோரிடம், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து பேசியதாவது:-
துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதினால் உங்கள் மகன் அஜித்குமார் அவர்கள் மரணமடைந்து விட்டார். தைரியமாக இருங்கள் அம்மா. உங்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை அ.தி.மு.க. துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம்.
இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம். இதை யாராலும் மன்னிக்க முடியாது. இது பெற்ற தாய்க்குதான் அந்த வலி தெரியும். அதனால் நீங்கள் மனம் தளராதீர்கள்.
எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது. இருந்தாலும் நீங்கள் இருக்கின்ற குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மனம் நிம்மதி இருக்க வேண்டும். நீங்களும் நிம்மதியாக இருந்தால் தான் அவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். அதனால் நாங்கள் உங்களுக்கு முழு துணையாக இருப்போம். அ.தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். நீதிமன்றம் மூலம் உங்களுக்கு நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும். மனம் தளராமல் இருங்கள். என்னுடைய ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் அம்மா.
இந்த நிகழ்வு மீள முடியாதது. ஒரு கொடுமையான சம்பவம் நடந்து முடிந்து விட்டது. உங்களது அண்ணன் இறப்புக்கு யார் யார் எல்லாம் காரணமோ, அவர்கள் தண்டிக்கப்படுகின்ற வரை அ.தி.மு.க. உங்களுக்கு துணை நிற்கும். நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்படும். தைரியமாக இருங்கள். எங்களது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.