காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், இதனை தடுக்க தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகள் நலனை காத்திடவும் முதலமைச்சர் விஜய், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ம் தேதி தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்கறிஞர் உமபதி, காவிரி தொழில்நுட்ப மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தனர். கடந்த 27-ம் தேதி டெல்லியில் முதலமைச்சருடன் மூத்த வழக்கறிஞர் உமாபதி ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, நீதிபதிகள் நியமனத்தில் முனைவர் பட்டம் பெற்ற ராம் சங்கரிடம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,

மேகதாது அணை திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும். இதனால் அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பதை சட்டவிரோதம் என்று அறிவித்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேகதாது அணைக்கான உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித நடவடிக் கைகளையும் எடுக்காமல் இருக்க கர்நாடக அரசு, காவிரி நீர் வாரி நிகம் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுச் சூழல் விதிகளை மீறும் மேகதாது அணை திட்டத்துக்கு சூழல் அனுமதியை தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version