மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதலைக் கண்டித்து, சென்னையில் இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரால் நகரின் முக்கியப் பகுதியில் பதற்றம் நிலவியது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தனியரசு மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் இந்த நடவடிக்கை உலகப்போருக்கு வித்திடும். இந்த விவகாரத்தில் இந்தியாவின் மௌனம் ஆரோக்கியமானது அல்ல” என்று கவலை தெரிவித்தார்.
போராட்டத்தை ஒட்டி 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தூதரகத்தைச் சுற்றி குவிக்கப்பட்டனர். அண்ணா சாலை, பீட்டர்ஸ் சாலை மற்றும் கதீட்ரல் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. தூதரகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து அப்புறப்படுத்தினர். ஏற்கனவே போர் சூழலால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் வெடித்துள்ள இந்தப் போராட்டங்கள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
