இந்தியாவிலேயே தமிழகம் தான் தனிக்காட்டு ராஜா என்பது போல 11.19 சதவீத இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நாம் பெற்றுள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வராயன் மலையின் கம்பீரமும், ஆன்மிகமும் நிறைந்த கள்ளக்குறிச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
உங்களை தமிழகத்தின் முதல்வராகியுள்ள நான், ஸ்டாலினாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். சாதனைகளுக்கான அரசு இது; வாயில் வடை சுடும் அரசு அல்ல. இந்தியாவிலேயே தமிழகம் தான் தனிக்காட்டு ராஜா என்பது போல 11.19 சதவீத இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நாம் பெற்றுள்ளோம்.
தமிழகம் தான் லீடர்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோ மொபைல், தோல் அல்லா காலணி உற்பத்தி, ஸ்டார்ட் அப் தரவரிசை என எல்லாவற்றிலும் தமிழகம் தான் லீடராக உள்ளது. இந்தியாவிலேயே தொழிற்சாலையில் பெண்கள் அதிக அளவு பணி புரிவது தமிழகத்தில் தான். எல்லாருக்கும் எல்லாம், அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று சொல்வது சும்மா அல்ல. மத்திய அரசு தரவரிசைகள் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்ம தான்.
நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழகம் முன்னேறுகிறது. இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும்.
ஏறுமுகம்
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பாழான தமிழகம், 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் துள்ளி குதித்து எழுந்து இருக்கிறது. இனி எப்பொழுதும் ஏறுமுகம். மத்திய அரசின் தடைகளை கடந்து இந்த இடத்தில் இருக்கிறோம். செய்திகளை படிக்க மாட்டோம். உண்மையை பேசமாட்டோம். தமிழகத்தின் சாதனையை பற்றி வாய் திறக்க மாட்டோம் என்று சிலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். இப்படியே கண்ணை மூடிக்கொண்டு இருங்கள், நாங்கள் அடித்து தூள் கிளப்பி கொண்டு போய்விட்டு இருக்கிறோம்.
ரோஸ் மில்க்
திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு மகுடமாக 2026ல் மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான். உங்களுக்கான ரியாலிட்டி செக் ஆக இருக்கும். கிறிஸ்துமஸ் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளை தாக்கும் சூழலை பாஜ அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த மாடலை தமிழகத்தில் கொண்டு வரப்பார்க்கிறார்கள். நம்ம மக்கள் உஷார். திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள்.
மதுரை சித்திரை திருவிழாவுக்கு வரும் ஹிந்து பக்தர்களுக்கு பள்ளி வாசல் முன்பு ரோஸ் மில்க் கொடுக்கிறார்கள். தை முதல் நாளில் தேவாலயத்தில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்துவிட்டால் கேக், பிரியாணி எங்கே என்று உரிமையாக கேட்கிறார்கள். ‘எம்மதமும் சம்மதம்’ என்கிற தமிழகத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம்தான், மதவாத அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜவின் கண்களை உறுத்துகிறது.
மதவெறி
எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும் சரி, ஒற்றுமையாக வாழக்கூடிய தமிழக மக்களிடம் மதவெறியைத் தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, திராவிட மாடல் அரசு இருக்கும் வரை உங்கள் மதவெறி ஆட்டத்திற்கு இங்கு இடம் கிடையாது. தமிழக மக்கள் உங்களை ஓட்டுக்களால் விரட்டி அடிப்பார்கள். தமிழகத்தில் உங்கள் வித்தை வேலைக்கு ஆகாது. நம்முடைய கடமை, வாக்காளர் பட்டியலில் நம்ம பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
8 புதிய அறிவிப்புகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 8 அறிவிப்புகள் பின்வருமாறு:
1. ரிஷிவந்தியம் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும்.
2. ரூ.18 கோடியில் உளுந்தூர் பேட்டை அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
3. உளுந்தூர்பேட்டை வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில், ரூ.10 கோடி செலவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
4. புதுப்பாலப்பட்டி கிராமத்தில் ரூ.18.50 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
5. சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடியில் புதிய தீயணைப்புத்துறைகட்டடம் கட்டப்படும்.
6. கல்வராயன் மலை பகுதியில் மகளிர் விடியல் பயணம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
7. கள்ளக்குறிச்சியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், குடியிருப்புகள் அமைக்கப்படும்.
8. திருக்கோயிலூர் பகுதி விவசாயிகளின் நலனுக்காக அரியூர் கிராமத்தில் ரூ.5.4 கோடியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
