தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டிருந்த முக்கியமான 5 டெண்டர்களை தமிழக போக்குவரத்துத் துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை போக்குவரத்துத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட டெண்டர்களில், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 60 ஆயிரம் பேருந்து டயர்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கான அடிச்சட்டம் (Chassis) வாங்கும் டெண்டர், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் வாகனத்தின் இருப்பிடத்தை அறிய உதவும் Vehicle Location Tracking Device (VLTD) கருவிகள் மற்றும் அவசரகால எச்சரிக்கை பொத்தான்கள் (Emergency Buttons) பொருத்துவதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கு புதிய பேருந்து கூடு (Bus Body) கட்டும் டெண்டர் உள்ளிட்டவை அடங்கும்.
மொத்தம் ஐந்து டெண்டர்களையும் ரத்து செய்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த டெண்டர்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக விரிவான விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லாததே டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துக் கழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
