கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அந்த உத்தரவில் மே 30ஆம் தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்றும் தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும் தவறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவற்றை மாற்றும் பட்சத்தில் அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற இயலாது என்பதால் பெயர்ப்பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரி சென்னை மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவகாசம் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசளித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், ஏற்கனவே இரண்டு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பெயர் பலகைகளை மாற்றுவதற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று வாதிட்டார்.
இதையடுத்து மனுதாரர் சங்கத்தின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.