ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை எதிர்த்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் மகாத்மா காந்தி பெயரை மாற்றி மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. அந்தவகையில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானங்களை கொண்டு வந்தார்.
சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாக கொண்ட மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நிதி வழங்காமல் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தில் தமிழக அரசுக்கு வழங்க கூடிய ரூ.1,026 கோடியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் மீது மட்டும் மத்திய அரசுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை? 100 நாள் வேலையில் ஒவ்வொரு ஆண்டும் 65லட்சம் குடும்பங்கள் பயனடைகிறது. உள்நோக்கத்துடன் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விபி ஜி ராம் ஜி என மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்” என கூறினார்.
