மதுபான காலி பாட்டில்களை திரும்பப்பெறும் உத்தரவை மாவட்ட நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி ஈரோடு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்
இன்று மூன்றாவது நாளாக கடைகளை அடைத்து மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் விற்பனையின் போது ஸ்டிக்கர் ஒட்டி பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்து வாடிக்கையாளர்கள் மீண்டும் மது பாட்டில்களை அதே டாஸ்மாக் கடையில் ஒப்படைத்தால் திரும்ப பத்து ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை அரசு மதுபான கடை ஊழியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் சூரியம்பாளையத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம், பாட்டாளி தொழிலாளர் சங்கம், எல்.எல்.எப், சிஐடியு, ஏஐடியுசி, விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் இன்று மூன்றாவது நாளாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
