தட்கல் டிக்கெட் எடுக்க ஓடிபி கட்டாயம் என்ற விதியை மேலும் 5 ரயில்களுக்கு தெற்கு ரயில்வே விரிவுபடுத்தியுள்ளது.
அவசர பயணத்திற்காக ரயிலில் பயணிப்போருக்கு தட்கல் டிக்கெட் நடைமுறையை இந்திய ரயில்வே வைத்துள்ளது. இதன்கீழ் பயணத் தேதிக்கு ஒருநாள் முன்னதாக டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
இந்த தட்கல் டிக்கெட் முறையில், முறைகேடு நடைபெறுவதை தடுக்கவும், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் ரயில்களில் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை தெற்கு ரயில்வே கட்டாயமாக்கி வருகிறது. ஏற்கெனவே சில ரயில்களில் இந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சென்டிரல் – அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் சூப்பர்பாஸ்ட் ரயில், சென்னை சென்டிரல்- ஹவுரா செல்லும் கோரமண்டல் சூப்பர்பாஸ்ட் ரயில், ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் விரைவு ரயில், சென்னை சென்டிரலில் இருந்து மும்பை சென்டிரல் செல்லும் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து மும்பை சென்டிரல் செல்லும் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் ஆகியவற்றிலும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஓடிபியை தெற்கு ரயில்வே கட்டாயம் ஆக்கியுள்ளது.
இது செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்து இருப்பதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
