சேலம் மேட்டு அக்ரஹாரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” புதுக்கோட்டை கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில் பெரும்பாலானவை முறையாக பராமரிக்கப்படவில்லை. பல ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் கோவிலுக்கே வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் கோவில்களுக்கான சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுவதையும் அதிலிருந்து வருவாய் கிடைக்க வழி வகை செய்து கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். அதோடு வருவாய்ட்ட் கிடைக்கப்பெறும் முறைகளிலும், அதன் செலவீனங்களிலும் வெளிப்படை தன்மை பின்பற்றப்பட வேண்டும். ஆனால் புதுக்கோட்டை கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக பராமரிக்கவும், கோவில் புறம்போக்கு நிலங்களை முறையாக பாதுகாப்பதோடு, கோவிலின் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஸ்ரீமதி அமர்வு, “இந்து சமய அறநிலையத்துறை விதிகள் படி கோவிலுக்கு சொந்தமான நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட வேண்டும். அவை கோவிலின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தவறுகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி மனுதாரரின் மனு குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பின் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.