தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில் நிதி பாதுகாப்பாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு  உத்தரவாதம் அளித்துள்ளது.

கோவில்களின் உபரி நிதியை தமிழ்நாடு அரசின் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், அறநிலையத்துறை சட்டத்தின் முதலீட்டு வீதிகளில் திருத்தம் செய்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், கோவில் நிதியை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடைவிதிக்கக் கோரியும் சென்னையை சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் ஆலய வழிபாட்டாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவரான டி.ஆர்.ரமேஷ் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கோவில் சொத்துக்களையும், நிதியை பாதுகாக்கும் நோக்குடன் அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்ட நிலையில், சட்டத்துக்கு முரணாக, அரசு உத்தரவு அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 2,700 கோடி ரூபாய் கோவில் நிதி சட்டவிரோதமாக அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது; இதனால் கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரார் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில் நிதி பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளுக்கு உரிய வட்டி முறையாக வழங்கப்பட்டு வருகிறது என்பதால், முதலீட்டின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவாதத்தை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version