திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கும்மங்குடி பாலம் அருகே நேற்று மாலை இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 2 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து திருப்பத்தூர், மதுரை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவ்ர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து திருப்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிலக்கோட்டை அருகே பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சென்றாயன் (36), சிங்கம்புணரி முத்துமாரி (60), காரைக்குடியைச் சேர்ந்த கல்பனா (36), அரியக்குடி மல்லிகா (61), தேவகோட்டை குணலட்சுமி (55), மேலூரைச் சேர்ந்த செல்லம் (55), அம்மன்குறிச்சி தெய்வானை (58), வேலூரை சேர்ந்த முத்துலட்சுமி (49), திண்டுக்கல் மாவட்டம் வெற்றிச்செல்வி (60) மற்றும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த லாவண்யா (50) ஆகிய 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், காரைக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணின் உடல் மட்டும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
போலீசார் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தெய்வானை, குணலட்சுமி மற்றும் செல்லம் ஆகிய மூன்று பேரின் உடல்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், குணலட்சுமி மற்றும் தெய்வானை ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைவரின் உடல்களையும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மதுரை, காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 22 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
