தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, வரவிருக்கும் தேர்தலில் தனது கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாததால் கடும் அதிருப்தியில் உள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த முறை தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அவர் கருதுகிறார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், தனியரசுக்கு மட்டும் சீட் வழங்கப்படாததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தியால், திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவது குறித்துத் தனது கட்சி நிர்வாகிகளுடன் தனியரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். “கூட்டணியில் உரிய மரியாதை இல்லை” என்கிற கோணத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளதால், அவர் மீண்டும் பழைய கூட்டணியான அதிமுக பக்கமோ அல்லது தனித்தோ களம் காணும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க ஒரு சமூக அமைப்பின் தலைவர் தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணியில் இருந்து விலகுவது, அந்தப் பகுதியில் திமுகவின் வாக்கு வங்கியில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version