மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா (Nayara) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நயாரா எரிபொருள் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 5 முதல் ரூ.5.30 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திடீர் உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வினைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.05-க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பிரீமியம் (Premium) ரக பெட்ரோல் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சாதாரண பெட்ரோல் விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் பங்குகளில் வாகனங்களின் வரிசை அதிகரித்து வருவதோடு, விலை உயர்வு குறித்த அதிருப்தியையும் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நயாரா நிறுவனத்தின் இந்த விலை உயர்வு நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகியவற்றின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பொதுவாகத் தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தும்போது, சந்தை சமநிலையைத் தக்கவைக்க மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வு அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version