தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு (CEC) கூட்டம் வரும் மார்ச் 28 அன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழகத்திற்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து மிக முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களைக் களமிறக்குவதே இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் கள நிலவரம் குறித்துத் தயாரிக்கப்பட்ட ரகசிய அறிக்கையைச் செல்வப்பெருந்தகை இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். வேட்பாளர் தேர்வு மட்டுமின்றி, தேர்தல் பிரசார வியூகங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version