கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் ஒன்று ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்பொது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், பள்ளி வாகனம் இழுத்து செல்லப்பட்டு, அதில் பயணித்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டதில், இரு மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கு கேட் கீப்பர் ரயில்வே கேட்டை திறந்து வைத்திருந்ததால் மட்டுமே இந்த விபத்து நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணமும் அறிவித்தார். இந்த நிலையில் இது குறித்து தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
அதாவது, ”கேட் கீப்பர் வழக்கம் போல் ரயில் கேட்டை மூடி வைத்திருந்ததாகவும், ஆனால் பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக கேட்டை திறக்க வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளது. அதனால் தான் கேட் கீப்பர் கேட்டை திறந்து விட்டதாகவும், இருப்பினும் அவர் விதிகளை மீறி செயல்பட்டதால், அவரை பணி நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அத்தோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களை ரயில்வே மருத்துவர்கள் கவனித்து வருவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்” எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
