மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 7) திறந்து வைத்தார்.

மதுரையில் மாட்டுத்தாவணி, அண்ணா நகர், ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய 4 பகுதிகளை இணைக்கும் விதமாக மேலமடை சந்திப்பு உள்ளது. இந்த சாலை குறுகலான பகுதியாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் இருந்து வந்தது. மேலும், அந்தப் பகுதியில் மருத்துவமனைகள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள், ரிங் ரோட்டை இணைக்கும் பகுதியாக மேலமடை சாலை அமைந்துள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக அந்த வழியாக அலுவலங்களுக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இதனையடுத்த, மேலமடை பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை மதுரை மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே நீண்ட காலமாக எழுந்து வந்தது. இதனையேற்ற தமிழ்நாடு அரசு மதுரை- சிவகங்கை சாலையில் ஆவின் பாலகம் சந்திப்பு முதல் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளை துவங்கியது. அதன்படி, கடந்த 2023 அக்டோபர் 30ம் தேதி உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். 1,100 மீட்டர் தொலைவுக்கு 28 தூண்களை கொண்ட பாலத்தின் பணிகள் முடிவடைந்தநிலையில், இன்று (டிச. 7) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன்காரணமாக அண்ணா நகர், மாட்டுத்தாவணி, கேகே நகர், அண்ணா பேருந்து நிலையம், கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள். மேலும் மதுரையில் இருந்து சென்னை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதில் செல்ல முடியும். வாகன ஓட்டிகளின் பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version