காங்கிரஸ் மீது மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. தளபதி வைத்த விமர்சனத்துக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக நிர்வாகி தளபதி ‘நாங்கள் இல்லாவிட்டால் ‘இந்தியா’ கூட்டணியே கிடையாது’ என்று பேசியிருந்தார். இந்தநிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “39 காங்கிரஸ் தலைவர்களை அழைத்து தமிழ்நாடு காங்கிரஸின் நிலை பற்றி, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கேட்டறிந்தார்கள். அதற்கு முன்பு டிசம்பர் 3-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களது தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸின் நிலையை எடுத்து சொன்னது. அந்த குழு சந்திப்பிற்கு 2 நாட்கள் முன்பு தி.மு.க எம்.பி கனிமொழி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.

அது பற்றி வெளிவரும் செய்திகள் கற்பனை கதைகளாக தான் இருக்கும். மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெற வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினேன். என்னை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ, இழிவுப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு எந்த ஒரு தயவு தாட்சண்யமும் பார்ப்பதில்லை. காங்கிரஸ் கட்சியினுடைய தன்மானம் ரொம்ப முக்கியம்.

கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்தும் செயலை செய்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொருவரின் கோரிக்கை ஆகும்.

வடக்கு தொகுதியில் 13-ஆம் தேதி பி.எல்.ஏ கூட்டம் போடுவோம். அப்போது காங்கிரஸின் பலத்தை காட்டுவோம். சும்மா பார்த்துவிட்டு விட்டு செல்வதற்கு காங்கிரஸார் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் சொல்பவர் மட்டும் அல்ல. திருப்பி அடிப்போம். முதலில் தேர்தல் அறிவிக்கட்டும், கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கட்டும், தொகுதி பங்கீடு குறித்து பேசட்டும்  அதன்பிறகு பேசலாம்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version