தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்தநிலையில், தயாரிக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை  தேர்தல் ஆணையம் இன்று (டிச. 19) வெளியிடுகிறது.

2026ல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி,  SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. நவம்பர் 4ம் தேதி துவங்கிய  வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் டிசம்பர் 14ம் தேதி நிறைவடைந்தது. வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள், 100 சதவீதம் முடிவடைந்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (டிச. 19) வெளியிட உள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், SIR பணிகள் சரியாக நடைபெறவில்லை என கூறப்படும் நிலையில், இன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில், குளறுபடிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் உரிய வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படவில்லை என்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் முறையாக பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து, 50 லட்சம் பேர் வரை நீக்கப்படுவர் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால், இன்று வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் சில குளறுபடிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதில் உள்ள குறைகளை வாக்காளர்கள் உரிய படிவங்களை செலுத்தி நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் வரை, புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version