நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை பெரும் பிழையை செய்துள்ளதாகவும், நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் 78வது பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு‌ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு. நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

சட்ட விரோதமான பணம் பரிமாற்றம் தான் குற்றம். காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றச்சாட்டு வைக்க வேண்டும் ஆனால் இந்த வழக்கில் காவல்துறை அல்லது புலனாய்வுத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் அமலாக்கத்துறை பதிவு செய்வது சட்ட விரோதம். இது எப்ஐஆர் அல்ல தனிப்பட்ட குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார்.

8 ஆண்டுகள் கழித்து 2021ல் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பெரும் பிழையை செய்துள்ளது. இவ்வழக்கில் யாருக்கும் யாரும் பணம் கொடுத்தது என்ற குற்றச்சாட்டு இல்லை. சட்டம் 25ன் படி லாபத்தில் பங்கு செலவுக்கு பணம் எடுக்க முடியாது என்றார்.

ஒரு ரூபாய் கூட பண பரிமாற்றம் செய்யாத நிலையில் எப்படி சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசு இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கை எடுக்க கூடாது. மேல்முறையீடு செய்ததாக தகவல் இல்லை, செய்யலாம் என தகவல்கள் பரவுகிறது, செய்யட்டும் அப்படியானால் அவர்களுக்கு புத்தி தெளியவில்லை என்று அர்த்தம் . மேலும் அமலாக்கத்துறை பாஜக ஆளாத மாநிலங்களில் கவனம் செலுத்துகிறார்கள்‌ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆங்கிலம் ஆகிவிடாது. அதற்கு மாற்று பெயர் இந்தியுமல்ல ஆங்கிலமுமல்ல, ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் அமைச்சர்களுக்கே புரியவில்லை. மகாத்மா காந்தியை விட இந்த திட்டத்திற்கு பொறுத்தமான பெயரா இது என்று கேள்வி எழுப்பிய அவர், வேலை பார்ப்பவர்களில் மொத்த ஊதியத்திற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். பொருட்கள் செலவிற்கு 75% ஒன்றிய அரசு 25 % மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version