காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே நேற்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியச் சாலையில் நெஞ்சை பதறவைக்கும் இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, ஹெல்மெட் அணிந்து தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டு, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணிமங்கலம் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் காவல் துறையினர், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
