தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுகாலமாக நீடித்து வரும் திமுக மற்றும் அதிமுக இடையிலான இருமுனைப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தவெக, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது.
குறிப்பாக, இம்முறை பதிவான 85.15 சதவீத வாக்குப்பதிவுக்கு விஜய்யின் வருகையே முக்கியக் காரணியாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் நேரடியாகக் களமிறங்கியுள்ளது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னையில் தவெக வேட்பாளர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து விஜய் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். ஏற்கனவே மாநில நிர்வாகிகளுடன் கடந்த 24-ஆம் தேதி ஆலோசித்த அவர், தற்போது தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்களையும் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய செயல்பாடுகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்த முக்கியக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
