தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம்  அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக உள்துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த  தீரஜ்குமாரை அதிரடியாக மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய உள்துறைச் செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5 மணிக்குள் மணிவாசன் பதவியேற்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் நிர்வாக ரீதியான நடுநிலைமையை உறுதி செய்யும் வகையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதேபோல், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமல்லாது, ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சந்தீப் மிட்டல் ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். “தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகச் செயல்படுகிறது” என்று அவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது உள்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் மாற்றங்கள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான விவாதங்களை உருவாக்கியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version