லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,953 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போரிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒத்துக்கொண்டதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரான் மீது இதுவரை இல்லாதவகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் கடந்த ஏப். 7 அன்று 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, ஈரான், இஸ்ரேல், வளைகுடா நாடுகள், லெபனான் என அனைத்து பகுதிகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது.
இந்நிலையில் லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,953ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 8ம் தேதி அமலுக்கு வந்த போர்நிறுத்தத்திற்குப் பிறகான தாக்குதல்களில் மட்டும் 357 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் அறிவித்துள்ளது. உயிரிழப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க உயர்வு, தொடரும் மோதலையும் அது பொதுமக்கள் மீது ஏற்படுத்தும் பேரழிவையும் எடுத்துக்காட்டுகிறது. மோதலால் பாதிக்கப்பட்டவர்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

