தமிழகம் 2026 தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தாண்டிற்கான சட்டப்பேரவை  முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

ஆண்டுதோறும் சட்டப்பேரவை முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்க உள்ளது. இதில் உரையாற்றுவதற்காக காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்துக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. இருப்பினும், நாளை பேரவையில் கவர்னர் உரையாற்றுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால், கடந்த 2021ல் ஆளுநராக  ரவி பொறுப்பேற்ற பிறகு 2022ல் மட்டும் உரையை முழுமையாக வாசித்தார். இதையடுத்து 2023ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் பாதியிலேயே வெளியேறினார்.  இதேபோல், 2024, 2025-லும் தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறி உரையை வசிக்காமலேயே வெளியேறினார். இந்தநிலையில், நாளைகூடும் சட்டப்பேரவை கூட்டத்திலாவது ஆளுநர் ரவி உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிக்க உள்ளார். அத்துடன் முதல் நாள் கூட்டம் நிறைவடைய உள்ளது.  அதன்பின் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version