தவெக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகாது என்றும் விஜய்யே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று (டிச.14) முதல் தவெக அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. சில மாதங்களுக்கு முன்பே 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெற்றதாக கூறப்பட்டது. இருப்பினும், திருச்செங்கோட்டில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வேட்பாளர் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் தவெக வேட்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் தேர்வாகி இருக்கிறார் என்றும் அவரை இன்று தவெக தலைமை வேட்பாளராக அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவின.
ஆனால், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், தவெக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறான தகவல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர்களை விஜய் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறியுள்ளார். மேலும் தலைவர் விஜய் சொல்வதையே அப்படியே பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார். இதனால், வேட்பாளர்கள் அறிவிப்பு அடுத்துவாரம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
