தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், துரை சந்திரசேகர் பொன்னேரியிலும், ஹசன் மௌலானா வேளச்சேரியிலும் மீண்டும் களம் காண்கின்றனர். அதேபோல், திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் அறந்தாங்கியிலும், மாங்குடி காரைக்குடியிலும், ரூபி மனோகரன் நாங்குநேரியிலும் போட்டியிடுகின்றனர். விளவங்கோடு எம்.எல்.ஏ-வான தாரகை கத்பர்ட் இம்முறை குளச்சல் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். விளவங்கோட்டில் விஜயதாரணி போட்டியிடுகிறார்.

அதே சமயம், மயிலாடுதுறை ராஜ்குமார், குளச்சல் பிரின்ஸ் உள்ளிட்ட 5 தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் சிட்டிங் எம்எல்ஏ ராஜ்குமாருக்குப் பதிலாக ஜமால் யூனஸ் முகமது போட்டியிடுகிறார். உதகை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பி. ராமசந்திரனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொகுதிப் பங்கீட்டு அடிப்படையில் தென்காசி தொகுதி திமுகவுக்கும், விருதாச்சலம் தொகுதி தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. காரைக்குடியில் மாங்குடியும், அறந்தாங்கியில் திருநாவுக்கரசுவின் மகன் ராமசந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேட்பாளர் பட்டியலில் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக, பாமக எம்எல்ஏ ஜி.கே. மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்குமரன் பென்னாகரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸில் தயாரிப்பாளராக இருந்த இவர், கடந்த மார்ச் 28-ம் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். தற்போது இவரது தந்தை ஜி.கே. மணி அதே பென்னாகரம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், மேலூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேலூரில் இளைஞர் ஒருவரை களமிறக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version