2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தவெக-வுடன் இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. தற்போதைய நிலையில் காங்கிரஸால் திமுகவை விட்டு வெளியேற முடியாது என்றாலும், தொகுதிகளை பேரம் பேசுவதற்கு ‘விஜய் கார்டை’ ஒரு ஆயுதமாக பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதிக இடங்களைப் பெறவும், கூட்டணியில் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் இத்தகைய சலசலப்புகளை கூட்டணிக் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இது 2026 தேர்தலில் திமுகவிற்கு தொகுதி பங்கீட்டில் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது. கட்சியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நடக்க வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தேலைமை பேச்சு நடத்தி வருகிறது.
த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது வதந்தி. தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது? தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
