நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவருக்கு சொந்தமான மகள் மதுரையில் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகளுக்கு துணையாக அவருடைய மனைவியும் அவருடைய மகளுடன் இணைந்து மதுரையில் வசித்து வருகின்றனர்.
இதனால் ஜேம்ஸ் பால் அவ்வப்போது நெல்லையில் இருந்து மதுரைக்குச் சென்று தன்னுடைய மனைவி மற்றும் மகளை சந்தித்து வருவார். தன்னுடைய வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், ஜேம்ஸ் தனது மொபைல் போனிலிருந்து வீட்டை கண்காணித்து கொள்வார்.
அதன்படி கடந்த நவம்பர் 24ஆம் தேதி மதுரைக்கு ஜேம்ஸ் சென்று இருக்கிறார். அவர் சென்ற மறுநாள் 25ஆம் தேதி வீட்டின் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று தெரிந்தவுடன், அங்கிருந்து தொலைபேசியில் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள நபரை அழைத்து தனது வீட்டில் சோதனை இடுமாறு கூறியிருக்கிறார்.
பக்கத்து வீட்டு நபர் சோதனையிடும் பொழுது ஜேம்ஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது வெளிவந்தது. தகவல் அறிந்த ஜேம்ஸ் விரைந்து நெல்லைக்கு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்க்கையில் வீட்டின் பீரோ திறக்கப்பட்டு உள்ளிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போயிருந்தது.
அதோடு திருட வந்த திருடன் ஜேம்ஸ் அவர்களுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறான்.”வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை.இதில் எத்தனை சிசிடிவி கேமராக்கள். அடுத்த முறை என்னைப் போல ஒரு திருடன் வந்தால் அவன் ஏமாறாமல் இருக்க காசு வை. மன்னித்துக் கொள்ளவும் – இப்படிக்கு திருடன்”, இவ்வாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிய திருடனை போலீசார் தேடி வருகின்றன.
மறுபக்கம் இவ்வாறு நக்கலாக கடிதம் எழுதி வைத்து திருட வந்த அத்திருடனின் செயலால் அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர்.
